உள்ளாடைகளில்கவனம் தேவை!
இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபா:
சுத்தமின்மை தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். நம் உடலானது, வியர்வை, எச்சில், சிறுநீர், மலம் என, பல்வேறு வழிகளில் கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று நடக்காமல் போனாலும், வாய் நாற்றம் துவங்கி, உடலில் துர்நாற்றம் வீசுவது வரை நடக்கும்.
சிலருடைய உடலில் மீன் நாற்றம் அடிக்கும். அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாததே, இதற்கு காரணம். இது தொடர்ந்தால், 'வெஜைனல் இன்பெக் ஷன்' கூட ஏற்படலாம்.
மாதவிலக்கின் போது, அந்தரங்கப் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அதற்காக, வாசனை அதிகமான சோப்புகளை இந்த இடத்தில் பயன்படுத்தக் கூடாது. இப்படி செய்தால், அந்த இடத்திலுள்ள சுரப்பிகள் அடைப்பட்டு விடும். இதனால், அந்தரங்கப் பகுதி வறண்டு போகும்.
அதேநேரம், சோப்பு போட்டு வாஷ் பண்ணாமல் விட்டாலும், பாக்டீரியாக்கள் அரிப்பு, நாற்றம் என, படுத்தி எடுத்திவிடும். எனவே, மைல்டான சோப்பை பயன்படுத்தலாம். மேலும், அந்தப் பகுதி ரோமங்களை ஷேவ் செய்து கொள்வதால், பொடுகுத் தொல்லை, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
உதிரப் போக்கு அதிகம் இருப்பவர்கள், குவாலிடியான, அதிகப்படியான ஈரத்தை இழுக்கும் மெலிதான சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துங்கள். ரத்தப் போக்கின் அளவைப் பொறுத்து, அதை மாற்றிக் கொண்டே இருங்கள். இல்லையெனில், பாக்டீரியாக்கள் உருவாகி, தொற்று நோய் உண்டாவதுடன், கூடவே கெட்ட நாற்றத்தையும் ஏற்படுத்தும்.
உடல் ஷேப்புக்காக உடம்பை இறுக்கிப் பிடிக்கிற உள்ளாடைகளால், சுவாசிக்க முடியாமல் போவதுடன், ரத்த ஓட்டமும் பாதிக்கும். அதேபோல், காற்றுப் போகாத இறுக்கமான உள்ளாடைகள், வியர்வையைக் கூட காய விடாது. இதனால், பூச்சைத் தொற்று உண்டாகும். எனவே, உடலை இறுக்காத, உடல் சுவாசிக்கும் வகையில் உள்ள உள்ளாடைகள் தான் சிறந்தது.
மாதவிலக்கு சமயங்களில், உள்ளாடைகளை கிருமி நாசினியைப் பயன்படுத்தித் துாய்மைப்படுத்துங்கள். அதோடு, கட்டாயம் அதை சூரிய ஒளியில் உலர்த்தி எடுங்கள். இதனால், ஓடி ஒளியும் மைக்ரோ
ஆர்கனிசம் கூட, காணாமல் போய்விடும்.கிருமி நாசினி பயன்படுத்தி அலசிய உள்ளாடைகளை, நன்கு தண்ணீரில் அலசுவதும் மிக முக்கியம். ஏனெனில், அதில் இருக்கும் கெமிக்கல், அந்தரங்கப் பகுதியை பாதிப்பதை தவிர்க்கலாம்.
வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், கிருமி நாசினியால் அந்தப் பகுதியை சுத்தம் செய்வது முற்றிலும் தவறு. இதற்கு பதில், மெல்லிய சானிட்டரி லைனரை பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் கடுக்காயை போட்டு கொதிக்க வைத்து, அந்தரங்கப் பகுதியை கழுவினாலும், வெள்ளைப்படுதலால் வருகிற கசகசப்பும், பாக்டீரியல் இன்பெக் ஷனும் போய்விடும்.
கை வைத்தியம் போதும் உடலுக்கு!
கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை கூறும், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி:
கரோட்டின் மற்றும் விட்டமின், 'ஏ' சத்து நிறைந்தது கேரட். விட்டமின், 'ஏ' கண்களுக்கு மிகவும் நல்லது என்பதுடன், உடல் திசுக்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. கரோட்டின் சத்து தொடர்ந்து கிடைக்கப் பெற்றால், சருமம் பளிச்சென்றாகும்.
ஒரு, 'கப்' கேரட் துருவலுடன், நான்கு வெள்ளரி துண்டுகள் சேர்த்து, நன்கு அரைத்து, இதை வடிகட்டினால், வழவழவென, 'க்ரீம்' போல வரும். அதை, கண்களை சுற்றி, அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து, கண்களுக்கு மேற்புறமும் வைத்துக் கொள்ளலாம்; 10 நிமிடங்கள் கழித்து, துணியை எடுத்துவிடவும். இது, கண்களை பளிச் என்று ஆக்குவதுடன், கூரிய பார்வை கிடைக்கச் செய்யும்.
வெயிலில் வேலை செய்வோர் மற்றும் லேப்டாப், கணினியில் வேலை செய்வோருக்கு, அந்த வெப்பம் காரணமாக, முகம் மங்கிக் காணப்படும். அரைத்த கேரட்டுடன், ஒரு டீஸ்பூன் பால், சிறிது கடலை மாவு சேர்த்து, முகத்தில், 'பேக்' போட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, மங்கிய முகம் தன் இயல்பை மீட்கும்.
கேரட்டை பாலில் வேக வைத்து அரைக்க, க்ரீம் போல கிடைக்கும். இதை தினமும் வெளியே செல்லும் போது, மாய்ஸ்ச்சரைசராக முகம், காது மற்றும் கழுத்து பகுதியில் பயன்படுத்தலாம். இதனால், வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும். காது, கழுத்து பகுதிகளில் உள்ள கருமை நீங்குவதோடு, புருவம் அரிப்பதும், புருவத்தில் முடி உதிர்வதும் தடுக்கப்படும்.
அரை கப் கேரட் சாற்றுடன், சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில், 'பேக்' போட்டு, அரைமணி நேரம் கழித்து உரித்தெடுக்கவும். இதை தொடர்ந்து செய்து வர, கரும்புள்ளிகளுக்கு, 'பை பை' சொல்லலாம். டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, கன்னங்கள் வெளிறிப் போயிருக்கும். அதை சரிசெய்ய, ஒரு கேரட், இரண்டு பேரீச்சம் பழத்துடன், சிறிது பால் சேர்த்து அரைக்கவும். இதை கன்னங்களுக்கு, 'பேக்' போட்டு கழுவி வர, இழந்த பொலிவு மீண்டும் கிடைக்கும்.
பிரசவத்துக்கு பின் பெண்களுக்கு, வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வந்துவிடும். குழந்தை பராமரிப்பு பொறுப்புகளுக்கு இடையே, அதை நீக்கும் வழிமுறைகளை செய்யத் தவறினால், அது நிரந்தரமாக தங்கிவிடும். அதைத் தவிர்க்க, ஐந்து துண்டுகள் கேரட்டுடன், ஐந்து பாதாம் சேர்த்து அரைத்து, தழும்புகளில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து குளிக்கவும். இதை தினமும் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
கேரட் சாறு, கஸ்துாரி மஞ்சள், பார்லி பொடி கலந்து, வாரம் ஒருமுறை சோப்புக்கு பதிலாக, இதை பயன்படுத்தி குளித்து வர, மாசு, துாசால் சருமத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.







No comments:
Post a Comment